ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) முன்வைத்துள்ள கொள்கை பிரகடனம் மிகச் சிறந்தது. நடைமுறைக்கு சாத்தியமான பல திட்டங்களை அவர் முன்வைத்துள்ளார் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன(Rohitha Abeygunawardena) தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
களுத்துறை மாவட்ட மக்களுக்கு இயலுமான வகையில் சேவையாற்றியுள்ளேன். மக்களுடன் மக்களாக ஒன்றிணைந்து செயற்பட்டுள்ளதால் சவால்மிக்க தருணத்திலும் மக்கள் என்னை தெரிவு செய்துள்ளார்கள். எனக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்வைத்துள்ள கொள்கை பிரகடனம் சிறந்தது. நடைமுறைக்கு சாத்தியமான பல திட்டங்களை முன்வைத்துள்ளார். நாட்டுக்கு நன்மை பயக்கும் சிறந்த திட்டங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எனது சகோதரர் போன்றவர். எதிர்க்கட்சியாக செயற்படுவது குறித்து கலந்துரையாடியுள்ளோம். ஆட்சியில் இருப்பதும், எதிர்க்கட்சியில் இருப்பதும் எமக்கு புதியதொரு விடயமல்ல.
கட்சி என்ற ரீதியில் வேறுபட்டிருந்த ரணில் விக்ரமசிங்கவுடன் நாட்டுக்காக கைகோர்த்த நாங்கள் எமது அரசியல் கட்சியான பொதுஜன பெரமுனவுடன் மீண்டும் ஒன்றிணைவது பாரியதொரு விடயமல்ல.
அரசியலில் நெடுநாள் நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை. நாட்டின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம். நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.